கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறைக்குள்ளேயே ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவமொக்கா மாவட்டம் பாலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தனஞ்சய் (51) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

வியாழக்கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த தனஞ்சய், மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்துள்ளார். முன்னதாக, கிராமத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளையும் அவர் முடித்திருந்ததாகக் கூறப்படுகிறது. மதிய இடைவேளையின் போது, சில அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறி மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்லுமாறு தனஞ்சய் கூறியுள்ளார். பின்னர், வகுப்பறையின் கதவு மற்றும் ஜன்னல்களை உட்புறமாகப் பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகக் கதவை உடைத்து அவரை மீட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அன்று காலை அவர் சாதாரணமாகவே காணப்பட்டதாகச் சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி வளாகத்திலேயே இந்த அசம்பாவிதம் நடந்திருப்பதால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.