உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், நாய் ஒன்று கோயிலில் உள்ள தெய்வச் சிலைகளைத் தொடர்ந்து வலம் வரும் காட்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிஜ்னோர் மாவட்டத்தின் நகினா வட்டத்தில் உள்ள நந்த்பூர் கிராமத்தில் ஒரு பழமையான கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் உள்ள அனுமன்சிலையை, தெரு நாய் ஒன்று தொடர்ந்து சுற்றி வந்துள்ளது. சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், அந்த நாய் எவ்வித சலனமுமின்றி, மிகவும் நிதானமாகச் சிலையைச் சுற்றி ‘பிரதட்சணம்’ (வலம் வருதல்) செய்வதைக் காண முடிகிறது.

 

அப்போது மற்றொரு நாய் அருகில் வந்த போதிலும், தனது செயல்பாட்டை நிறுத்தாத அந்த நாய், தொடர்ந்து அனுமன் சிலையைச் சுற்றி வந்தது. அனுமன் சிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த துர்க்கை அம்மன் சிலையையும் அந்த நாய் வலம் வந்துள்ளது. பின்னர், கோயிலின் ஒரு மூலையில் மிகவும் அமைதியாக அமர்ந்து கொண்டது.

இந்தக் காட்சியை நேரில் பார்த்த கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இது ஒரு தெய்வீகச் செயல் என்றும், இறைவனின் அற்புதம் என்றும் அப்பகுதி மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். இந்தத் தகவல் காட்டுத்தீ போலப் பரவியதையடுத்து, அந்த நாயைக் காண்பதற்காக அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

சில பக்தர்கள் அந்த நாயை வணங்கி மரியாதை செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், கோயில் பகுதியில் தற்காலிகப் பூக்கடை மற்றும் பிரசாதக் கடைகள் முளைத்துள்ளன.

சமூவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இது குறித்துப் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ‘விலங்குகளுக்கும் பக்தி உணர்வு உண்டு என்பதற்கு இதுவே சாட்சி’ என ஒரு தரப்பினர் கூற, ‘இது நாயின் இயல்பான நடத்தையாகவோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காகச் சிலையைச் சுற்றி வந்திருக்கலாம்’ என மற்றொரு தரப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் எது எப்படியோ, இந்த ‘பக்தி மயமான’ நாயின் செயல் தற்போது அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.