சத்தீஸ்கரில் உள்ள ஒரு பள்ளியின் அரையாண்டுத் தேர்வில், நாயின் பெயருக்கான விருப்பங்களில் ஒன்றாக ‘ராம்’ என்ற பெயர் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெமேதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலத் தாளில், ஒரு நாய்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற கேள்விக்கு ‘ராம்’ என்பதை வழங்கியுள்ளனர்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, இந்து அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், தெய்வமான ஸ்ரீராமரையும் இழிவுபடுத்தும் செயல் என்று கூறி பள்ளியின் வாசலில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். பள்ளியின் தரப்பில் இந்தத் தவறுக்காக மன்னிப்பு கோரப்பட்ட போதிலும், மக்களின் கொந்தளிப்பு அடங்கவில்லை.

மேலும் வேண்டுமென்றே மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் இது செய்யப்பட்டதா அல்லது கவனக்குறைவால் நேரிட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.