சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம் ஏற்காடு, ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர், அம்மாப்பேட்டை ஆகிய பள்ளிகளில் பாலியல் புகார்கள் தொடர்ந்து எழுகின்றன. இதனை கட்டுப்படுத்த மற்றும் புகார்களை உடனுக்குடன் பெறுவதற்காக அனைத்து பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை பெரும்பாலான பள்ளிகள் தங்களது உள்ளகப் புகார் குழு விவரங்களை அனுப்பியுள்ளன. அக்குழுவின் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும். மேலும் அந்தக் குழுவின் விவரத்தையும் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் பாலியல் புகார்கள் குறித்த தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக கல்வித்துறை உயர் அதிகாரிகள், குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.