இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதல்: 112 டிரோன்களை வீழ்த்தி ஈரான் அதிரடி – “ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பழிவாங்குவோம்” என ராணுவம் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தணியாத நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபுல்ஃபசல் ஷேகர்ச்சி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க படைகளின் ஆதிக்கத்தை ஒழிக்க ஈரான் மக்கள் மீது நம்பிக்கை வைத்து அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சூழலில், ஈரானின் வான் பாதுகாப்புப் படை சமீபத்தில் தங்கள் எல்லைக்குள் நுழைந்த மூன்று எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு அதிநவீன MQ-9 டிரோன்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மொத்தம் 112 டிரோன்களை வீழ்த்தியுள்ளதாகக் கூறும் ஈரானிய ராணுவம், ‘கைபர்-ஷேகன்’ (Kheybar-Shekan) எனப்படும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டு இஸ்ரேலின் வடக்கு ராணுவக் கட்டளை மையங்கள் மற்றும் அமெரிக்கப் படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக, டெல் அவிவ் உட்பட 10 முக்கிய இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) தங்களின் நிலத்தடி சுரங்கங்களில் பதுக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான டிரோன்களை வீடியோவாக வெளியிட்டு உலக நாடுகளை மிரட்டியுள்ளது. “எங்கள் மக்களின் ரத்தத்திற்குப் பழிவாங்கும் வரை இந்த வேட்டை ஓயாது” என ஈரான் அறிவித்துள்ளதால், அப்பகுதியில் போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது.
