
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் விஷ்ணு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். ஒப்பந்ததாரரான இவருக்கு திருமணம் ஆகி ரஷ்மி (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் சம்பவ நாளில் அந்த வீட்டின் உரிமையாளர் விஷ்ணுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவர் போனை எடுக்காததால் வீட்டின் உரிமையாளர் நேரில் வந்து பார்த்தபோது கதவு திறந்த நிலையில் கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கணவன் மனைவி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் இருவரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்தால்தான் மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.