கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் இருக்கும் சி.எஸ் அகாடமி பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களை பள்ளி நிர்வாகம் காண்டிராக்ட் முறையில் இயக்கி வருகிறது. நேற்று குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி வேன் குருசாமி நகர் பகுதியில் சாலையோரத்தில் வந்து நின்று விட்டது.

இதனை பார்த்ததும் குழம்பிப்போன மாணவ மாணவிகள் இருக்கைகளை விட்டு எழுந்து பார்த்தபோது டிரைவர் குறட்டை போட்டு தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விசாரித்த போது டிரைவர் மதுபோதையில் இருந்ததால் போதை தலைக்கேறி இருக்கையிலேயே ஸ்டேரிங்கில் படுத்து தூங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாற்று வாகனம் மூலம் மாணவ மாணவிகள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த வடவள்ளி போலீசார் பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.