ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலை குழு அமைக்கப்பட்டு சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோபி அருகே கெட்டி செவியூர்குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது  திருப்பூரில் இருந்து வந்த பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் சோதனையிட நிறுத்தியுள்ளனர். சாலை ஓரமாக நிறுத்தாமல் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதோடு சோதனைக்கு ஒத்துழைக்க பாஜக வேட்பாளர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.பி முருகானந்தம் காரில் இருந்தபடி கண்காணிப்பு நிலை குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். மரியாதையா பேசி பழகனும், புரிஞ்சதுங்களா.. இல்ல வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன் என எச்சரிக்கை விடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.