பொள்ளாச்சி அருகேயுள்ள கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் இன்று காலை மூன்று 9-ம் வகுப்பு மாணவிகள், ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனையடைந்த மாணவிகள் சாணிப்பவுடர் கரைசலை குடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, வாயில் நுரை போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவர்களை கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். மேலும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தினையடுத்து மருத்துவமனையில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். “மாணவிகள் தவறு செய்திருந்தால் எங்களுக்கு தகவல் சொல்லியிருப்பீர்கள்; நீங்கள் நேரடியாக திட்டியது சரியல்ல” எனக் கூறி, ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி கல்வித்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
