அசாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணி அளவில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சில வினாடிகளுக்கு பொதுமக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது. மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடிச் செல்லும் சூழ்நிலையில், மனிதநேயம் இன்னும் உயிருடன் இருப்பதை சாட்சியமாகக் காட்டும் ஒரு சம்பவம் அன்றைய தினத்தில் நிகழ்ந்தது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாமின் உடல்குரி மாவட்டத்தில், 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. குவாஹாத்தி, இட்டாநகர் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். எனினும், இந்நிலநடுக்கத்தால் உயிர் அல்லது சொத்து இழப்பு ஏற்படவில்லை என்பது சற்று நிம்மதி தரும் செய்தி.
असम | नागांव में भूकंप के दौरान अस्पताल में बच्चों को बचाती दिखी नर्स, 5.9 तीव्रता का आया था भूकंप#Assam #earthquake #earthquakes #Nagaon pic.twitter.com/xLFfojYhnI
— Vistaar News (@VistaarNews) September 14, 2025
இந்த நேரத்தில், அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள ஆதித்யா நர்சிங் ஹோமில், நடக்கின்ற NICU பராமரிப்பு வார்டில் இருந்த இரு செவிலியர்கள், தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல், அங்கு சிகிச்சையில் இருந்த பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர். இருவரும் நிலநடுக்கத்தின் போது அஞ்சாமல் செயல்பட்ட காட்சிகள், அந்த மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, இருவரும் மக்களின் பாராட்டுகளுக்கும் புகழுக்கும் உரியவர்கள் ஆனார்கள்.
மேலும் இந்த வீடியோவை பகிர்ந்த மருத்துவமனை நிர்வாகம், இந்த அரிய சேவையைப் புகழ்ந்து தெரிவித்துள்ளது. மக்கள், அந்த இரு செவிலியர்களுக்கும் விருது வழங்க வேண்டுமென்று சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். நிலநடுக்கம் வந்தபோது பலர் தங்களை காப்பாற்ற ஓடினர். ஆனால் இந்த இருவர், மனிதநேயத்தின் உயிருள்ள எடுத்துக்காட்டாக மாறினார்கள்,” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
