கேரள மாநிலம் கொங்கோடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சாந்தகுமாரியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ‘டிஜிட்டல் கைது’ செய்வதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது எம்.எல்.ஏ. சாந்தகுமாரியின் செல்போன் எண்ணுக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்னை மத்திய பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களிடம் உங்களது செல்போன் எண் சிக்கியுள்ளது. உங்களது மும்பை வங்கிக் கணக்கிலிருந்து அந்தப் பயங்கரவாதிகளுக்குப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மற்றொரு நபர், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மலையாளத்தில் மிரட்டியுள்ளார். இதனை நம்பிய எம்.எல்.ஏ.-விடம், போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் வீடியோ கால் மூலம் பேசி, “நீங்கள் தற்போது டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். எனவே அறையை விட்டு வெளியேறக் கூடாது” என்று கூறி, அவரது ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளார்.

இதன் உண்மைத்தன்மையை உணர்ந்த சாந்தகுமாரி எம்.எல்.ஏ., உடனடியாகத் தனது கார் ஓட்டுநர் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடி கும்பல் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றது உறுதியானது. இந்தச் சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.