ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம், நான்கு வயது நர்சரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இந்தச் சம்பவம் ஜனவரி 2ஆம் தேதி நடந்துள்ளது. பள்ளிப் பேருந்தில் இருந்து வீடு திரும்பியபோது சிறுமி இந்தப் படுபயங்கரமான துயரத்தைச் சந்தித்தார். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ராணுவ வீரர்களும், பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கான அந்தப் பேருந்தில், பாதுகாவலர்களாகவே பணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்தில் சிறுமி தனியாக விடப்பட்டபோது, இந்த வீரர்கள் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரணதி பட்நாயக், குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் ₹10,000 அபராதம் விதித்துள்ளார். அபராதம் செலுத்தத் தவறினால், அவர்கள் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் நாராயண் பாண்டா தெரிவித்தார்.
குற்றவாளிகளில் ஒருவர் குஜராத்தைச் சேர்ந்த 30 வயது கான்ஸ்டபிள், மற்றவர் ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நாயக் ஆவர். பேருந்தில் இருந்து இறங்கிய பிறகு, சிறுமி தனக்கு நடந்த துயரத்தை தனது பெற்றோரிடம் விவரிக்க, அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ அதிகாரி அது பாலியல் வன்கொடுமை வழக்கு என்று உறுதிப்படுத்தினார்.
சிறுமியின் தாய் ஜனவரி 3ஆம் தேதி இரண்டு வீரர்கள் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காவல்துறை கண்காணிப்பாளர், ஒரு பெண் ஆய்வாளரை வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார், மருத்துவர்கள், ஓட்டுநர் உள்ளிட்ட ஏழு சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீவிரத் தீர்ப்பை வழங்கியது. மேலும், சிறுமிக்கு ₹10.50 லட்சம் செலுத்த மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
