
கடந்த 3 நாட்களில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் காரணமாக பல விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதன்முறையாக, கடந்த 14 ஆம் தேதி 3 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் ஒரு இண்டிகோ மற்றும் 2 ஏர் இந்தியா விமானங்கள் அடங்கும். கடந்த சில நாட்களில் மேலும் 7 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இதில் டில்லி-சிகாகோ இடையிலான ஒரு விமானம் அவசரமாக கனடாவில் தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கோவான் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் மும்பை போலீசாரால் கைதாகியுள்ளார். பணப்பிரச்னை காரணமாக தனது நண்பனை பழிவாங்கும் நோக்கில், அவரது பெயரில் போலி கணக்கை உருவாக்கி மிரட்டல் விடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில், மிரட்டல் விடுக்கும் பயணிகளை 5 ஆண்டுகள் விமானப் பயணத்திற்கு தடை செய்ய வேண்டும் என விமான நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. மேலும், மிரட்டல் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கான நஷ்டஈடு குற்றவாளிகளிடமே வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.