சமீபகாலமாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு மென்பொருள் பொறியாளருக்கு நேர்ந்த அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தான் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட அந்தப் பொறியாளருக்கு, அதே நிறுவனம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஆனால், அந்த சலுகைதான் அதிர்ச்சியின் உச்சம். முன்பு ஒரு குழுவாகச் செய்து வந்த ஒட்டுமொத்த வேலைகளையும், இப்போது அவர் ஒருவராகவே கவனிக்க வேண்டும் என்றும், அதற்குச் சம்பளமாக வெறும் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது. ‘வீட்டிலிருந்தே வேலை’ என்ற பெயரில், மிகக் குறைந்த ஊதியத்தில் அதிகப்படியான வேலையைத் திணிக்க முயன்ற நிறுவனத்தின் இந்தச் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பொறியாளர் சமூக வலைதளத்தில் பதிவிட்டபோது, நிறுவனங்களின் சுரண்டல் மனப்பான்மையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “ஒரு பக்கம் பணிநீக்கம் செய்துவிட்டு, மறுபுறம் அதே வேலையை மிகக் குறைந்த ஊதியத்திற்குச் செய்யச் சொல்வது ஊழியர்களின் உழைப்பை அவமதிக்கும் செயலாகும்” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் என்பது மிகக் குறைவு என்பதோடு, ஒரு குழுவின் வேலையைத் தனிநபர் மீது சுமத்துவது மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய கடினமான வேலைச் சந்தையைப் பயன்படுத்தி, நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக ஊழியர்களை இவ்வாறு வற்புறுத்துவது கார்ப்பரேட் உலகில் உள்ள இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.