இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர்.இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே முதலில் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். அதன் பின் தாய்லாந்துக்கு சென்று அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை திரும்பி கொழும்புவில் இருக்கும் அரசு பங்களாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கி இருந்தார்.

முன்னதாக அவர் அதிபராக இருந்தபோது அரசு மாளிகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இது குறித்து அந்நாட்டு நீதிமன்றம் இலங்கை அதிபருடைய அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்ய உத்தரவிட்டது. இந்த சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் முன்னாள் அதிபரான கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் நேற்று காவல்துறையினரால் அவருடைய இல்லத்தில் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணை வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது என காவல்துறை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.