மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில், பெண்ணை தொந்தரவு செய்ததாக ஒரு இளைஞர் பொதுமக்களால் கட்டி வைக்கப்பட்டு அடித்து, அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை, ரயில்வந்தி நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் வழக்கம்போல மக்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு இளைஞர் அப்பகுதியில் நுழைந்து, ஒரு பெண்ணிடம் தொந்தரவில் ஈடுபட  முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அந்த இளைஞரை பிடித்து கட்டினர். அவருடன் சண்டையிட்டு, அருவருப்பான முறையில் அவமானப்படுத்தினர். முதலில் அவனை அடித்தனர். பின்னர், அழுகிய முட்டைகளை அவனது தலையில் உடைத்தனர்.அவனது முகத்தில் எருமை சாணம் பூசினர். மேலும், அவனது கழுத்தில் காலணிகளால் செய்யப்பட்ட மாலை அணிவித்து அவமானப்படுத்தினர்.

இதன்பிறகு, அந்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய நடத்தை சமூகத்தில் கடுமையாக கண்டிக்கப்படவேண்டும் என்றும், சட்டத்தின் அடிப்படையில் முறையான தண்டனை அளிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பெண் பாதுகாப்பு குறித்து மீண்டும் தீவிர விவாதங்களை கிளப்பியுள்ளது. மேலும் அந்த வாலிபரை பெண் துடைப்புத்தால் அடிக்கும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.