ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் பிடாபுரத்தில் உள்ள வல்லப மகாசுவாமிகள் கோவிலில், நேற்று (நவம்பர் 9) ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோயில் ஊழியர்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, திடீரென சுவாமி உண்டியலில் இருந்து புகை வருவதைக் கவனித்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அவர்கள், உண்டியலுக்குள் தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்தனர். இதனால், உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகள் நனைந்து நாசமாகின.

பின்னர் உண்டியலைத் திறந்து பார்த்தபோது, ஏராளமான ரூபாய் நோட்டுகள் முழுவதும் எரிந்தும், சில நோட்டுகள் பாதி எரிந்தும், மற்றவை தண்ணீரில் நனைந்தும் காணப்பட்டன. இதையடுத்து, நனைந்த ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் துணியில் போட்டு காய வைத்தனர். அப்போது ‘ஹேர் டிரையர்’ கருவி மூலம் சூடான காற்றை ரூபாய் நோட்டுகள் மீது பாய்ச்சி உலர்த்தும் காட்சிகளும் காணப்பட்டன.

தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பக்தை சூடத்தை ஏற்றி, அதை நேராகக் கொண்டு வந்து உண்டியலில் போடும் காட்சி பதிவாகியிருந்தது. அந்தப் பெண் பக்தை யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், எரிந்துபோன உண்டியல் பணத்தை அவரிடமிருந்து மீட்க உள்ளதாகவும் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.