
வேலூர் மாவட்டம் மேல் அரசம்பட்டிக்கு அருகே தீர்த்தம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற வன காட்டு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வசித்திருந்த பழங்குடியினர் ஒருவரால் கண்டறியப்பட்டது.
அதாவது பழங்குடியினர் ஒருவர் காட்டுப்பகுதியில் கிழங்குகள் அறுவடை செய்து கொண்டிருந்தார். பின்பு அவர் மண்வெட்டியால் ஓரிடத்தில் தோண்டியபோது அதிலிருந்து ரத்தம் வந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் முன்பு திடீரென உருவம் ஒன்று தோன்றி “நான் இங்கு தான் இருக்கிறேன் உலகத்தை காப்பதற்காக இந்த வன பகுதியில் குடி இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்து விட்டதாக வரலாறு கூறப்படுகிறது. பின்னர் அவர் கிராமத்திற்கு சென்று ஊர் பெரியவரிடம் இதை பற்றி கூறியுள்ளார்.
அதன்பின் ஊர் பெரியவர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் வன பகுதிக்குள் சென்று மண்ணை தோண்டி பார்த்ததில் கிழங்கு ஒன்று அம்மன் வடிவில் இருந்துள்ளது. அம்மன் வனப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்தால் வன காட்டு காளியம்மன் கோவில் எனவும் மக்கள் அழைத்ததுடன் அம்மனுக்கு கோவில் கட்டி அபிஷேகம் செய்து காலம் காலமாக வழிபட்டு வர தொடங்கினர். அதன்படி நடைபாண்டிலும் வன காட்டு காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.
இதில் ஊர் மக்கள் அனைவரும் அம்மனுக்கு பொங்கலிட்டு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வந்தனர். இந்நிலையில் அங்கு குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் அனைவரும் வழி நெடுவே படுத்தவாறு சாமியார் ஒருவர் அவர்களது கைகளில் ஏறி குறி சொல்லி வந்துள்ளார். இவ்வாறு வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கோவில் நிர்வாகம் விழாவை சிறப்பித்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.