துபாய்க்குச் சுற்றுலா சென்ற இந்தியப் பெண்மணி ஒருவர், சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை தவறுதலாகக் குப்பையில் வீசிய நிலையில், துபாய் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் அது மீட்கப்பட்டுள்ளது. காமினி கண்ணன் என்ற அந்தப் பெண்மணி, தனது பழைய தங்கக் காசுகள் மற்றும் ஒரு தங்கக் கட்டியை புதிய பையில் மாற்றி மேசையில் வைத்திருந்தார்.
மேலும் வீடு சுத்தம் செய்யும் போது கவனக்குறைவாக அந்தப் பை குப்பையில் வீசப்பட்டது. தங்கம் தொலைந்ததை மறுநாள் உணர்ந்த குடும்பத்தினர், அது குப்பையோடு போயிருக்கும் என்பதால் திரும்பக் கிடைக்காது என நம்பி காவல்துறையில் புகார் கூட அளிக்கவில்லை.
ஆனால், குப்பை சேகரிப்பவர் அந்தத் தங்கத்தைக் கண்டெடுத்து தங்கச் சந்தை பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, அங்குள்ள அதிகாரிகள் அவரை விசாரித்தனர். துபாய் காவல்துறையினர் குப்பை சேகரிப்பு முறையைத் துல்லியமாகப் பின்பற்றி, அந்தப் பை எந்தக் கட்டிடத்திலிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்தனர்.
இந்நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு காவல்துறை அந்தப் பெண்ணின் மகனைத் தொடர்பு கொண்டு, உரிய ஆவணங்களைச் சரிபார்த்து தங்கத்தை ஒப்படைத்தது. துபாய் காவல்துறையின் நேர்மையையும் அவர்களது நவீன மேலாண்மை முறையையும் அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
