​தி.மு.க.வின் 75வது ஆண்டு பவள விழா மாநாடு சென்னையில் கோலாகலமாக நடந்தேறியது. மாநாட்டின் நிறைவுரையில் பேசிய கட்சியின் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமீப காலமாக தி.மு.க.வுடன் தான் போட்டி என்று பேசி வரும் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு மறைமுகமாகப் பதிலடி கொடுத்தார்.

தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கு சவால் விடுப்பவர்கள் குறித்துப் பேசிய அவர், “தி.மு.க.வின் நீண்ட நெடிய வரலாறு தெரியாத சிலர், மிரட்டிப் பார்க்கலாம் என்று எண்ணுகின்றனர். அதேபோல், திராவிட இயக்கத்தின் சரித்திரப் பாதையும், கொள்கை வீரியமும் தெரியாத இன்னும் சில ‘அறிவிலிகள்’, தி.மு.க.வைப்போல நாமும் வெற்றி பெற்றுவிடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர்,” என்று கடுமையாக விமர்சித்தார்.

​திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக் கான சூத்திரத்தை அவர் அப்போது அழுத்தமாகப் பதிவு செய்தார். “தி.மு.க. என்பது வெறும் ஆரவாரம் கொண்ட கூட்டம் அல்ல. கொள்கை, தியாகம், உழைப்பு ஆகிய அடித்தளத்தில் எழுந்து நிற்கும் இயக்கம். அத்தகைய இயக்கத்தைப் போல வெற்றி அடைய வேண்டும் என்றால், வெறும் ஆசை மட்டும் போதாது. அதற்கு அறிவும், அயராத உழைப்பும், மக்களின் நலனில் அக்கறையும் தேவை. இல்லாதவர்கள், தி.மு.க.வின் சித்தாந்த வலிமையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

75 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்த எஃகுக்கோட்டையை அசைத்துப் பார்க்க எவராலும் முடியாது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது உரையில் சூளுரைத்தார். இதன்மூலம், அரசியல் களத்தில் தி.மு.க.வின் எதிர்காலம் குறித்த தனது அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.