காலை நேரத்திலேயே சீக்கிரம் எழுவது மட்டுமே ஒரு மனிதனின் ஒழுக்கத்திற்கும் வெற்றிக்கும் சான்று என்ற பல நூற்றாண்டு காலச் சமூக நம்பிக்கையை நோக்கி, இளம் தொழில்முனைவோர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்வி இணையத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. தாமதமாக தூங்கி எழுவதை ஏன் ஒரு மனிதனின் ‘குணக்கேடாகவோ’ அல்லது ‘ஒழுக்கமின்மையாகவோ’ இந்தச் சமூகம் பார்க்கிறது என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு மனிதனின் உடலியல் கடிகாரமும் வேலை செய்யும் திறனும் வெவ்வேறானவை எனும் போது, அதிகாலையில் எழுபவர்கள் மட்டுமே சாதனையாளர்கள் என்றும், தாமதமாக விழிப்பவர்கள் சோம்பேறிகள் என்றும் முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற அவரது பதிவு ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த விவாதம் வெளிவந்த குறுகிய காலத்திலேயே இணையவாசிகள் மற்றும் வேலை பார்க்கும் இளைஞர்கள் மத்தியில் இரண்டு வேறுபட்ட முகாமாகப் பிரிந்து பெரும் கருத்து மோதலை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், “இரவு நேரங்களில் தான் அமைதியான சூழலில் எங்களால் அதிகக் கவனத்துடன் வேலை செய்ய முடிகிறது. உற்பத்தித்திறன் என்பது தூங்கி எழும் நேரத்தைச் சார்ந்தது அல்ல, நாம் செய்யும் வேலையின் தரத்தைச் சார்ந்தது” என்று தொழில்முனைவோரின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம், பாரம்பரிய சிந்தனையாளர்கள் மற்றும் ஆரோக்கிய வல்லுநர்கள், “அதிகாலை எழுவது உடலுக்கும் மனதுக்கும் அளிக்கும் நன்மைகள் மறுக்க முடியாதவை; அதுவே ஒழுக்கமான வாழ்க்கைக்கு அடிப்படை” என்று அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியும், மாறிவரும் பணிச்சூழலும் மனிதனின் அன்றாட வாழ்க்கை முறையையே தலைகீழாக மாற்றிப்போட்டுள்ள இந்தக் காலத்தில், இதுபோன்ற விவாதங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் அவரை பழங்காலத்திலிருந்து பின்பற்றப்படும் சமூக நடைமுறைகளுக்கும், நவீன கால வேலைப் பளு மற்றும் தனிமனித வாழ்க்கை முறைக்கும் இடையே உள்ள மோதலையே இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

காலையில் சீக்கிரம் எழுவதா அல்லது நள்ளிரவு வரை விழித்திருந்து வேலை செய்வதா என்பதைத் தாண்டி, ஒருவரின் உழைப்பும் அவர் அடையும் வெற்றியுமே முக்கியம் என்ற புதிய சிந்தனை நோக்கி இன்றைய இளைய தலைமுறை நகரத் தொடங்கியுள்ளதை இந்த இணைய விவாதம் தெளிவாக உணர்த்துகிறது.