மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நேரிட்ட கோர படகு விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள யொபி (Yobe) மாகாணத்தின் கர்பி நகரில் உள்ள சந்தைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு, சுமார் 52 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு படகு ஒன்று யொபி ஆற்றில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள், ஆற்றில் தத்தளித்த 13 பேரை உயிருடன் மீட்டனர். எனினும், ஆற்று நீரில் மூழ்கி 25 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாயமான 14 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நைஜீரியாவின் தொலைதூரப் பகுதிகளில் சாலை வசதி குறைபாடு காரணமாக படகு போக்குவரத்து முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், அதிகப்படியான பாரம் மற்றும் மோசமான வானிலை காரணமாக இத்தகைய விபத்துகள் அடிக்கடி நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.
