1960 ஆம் ஆண்டு பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நைஜரில் ஜனநாயக ஆட்சியும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி நடந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நைஜரில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது பஸும் வெற்றி பெற்று பத்தாவது அதிபராக 2021 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி முகமது பஸுமின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டதாகவும் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இந்த ராணுவ கிளர்ச்சியை முன் நின்று நடத்திய அப்தூரஹ்மேன் சியானி நாட்டின் தலைவராக பொறுப்பேற்றார்.

இதற்கு ஐநா மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனிடையே நைஜரில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டு வரவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எகோவாஸ் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் முயற்சி என்று மேற்கத்திய ஆப்பிரிக்க நாடுகளின் எகோவாஸ் கூட்டமைப்பு ராணுவ நடவடிக்கைகள் எடுத்தால் அது நீண்ட கால போராக உருமாறிவிடும். இது ஸஹேல் பிராந்தியத்தின் ஸ்திறத்தன்மையை பாதிக்கும் என எச்சரித்துள்ளது.