இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் சாம்சன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் கிரிக்கெட் பயணத்தில் ஏற்பட்ட தடைகள் குறித்துப் பேசிய அவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான மகேந்திர சிங் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரே சஞ்சுவின் வாழ்வின் 10 ஆண்டுகால பொன்னான வாய்ப்புகளைத் தட்டிப்பறித்ததாகக் குற்றம் சாட்டினார்.
இத்தனை திறமை இருந்தும் தனது மகனுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதைப் பகிரும்போது, ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவர் கண்கலங்கியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் கலந்த விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. சஞ்சு சாம்சன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போதுதான் இந்திய அணியின் டி20 போட்டிகளில் தனது இடத்தை நிலைநிறுத்தி வருகிறார்.
இந்தச் சூழலில் அவரது தந்தையின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் ஒரு தந்தையாக அவரது குமுறல் நியாயமானது என்று ஆதரவு தெரிவித்தாலும், தோனி மற்றும் கோலி போன்ற ஜாம்பவான்கள் மீது அவர் முன்வைத்த விமர்சனம் தேவையற்றது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, சஞ்சுவின் தந்தை கண்ணீர் சிந்திய அந்த வீடியோ, ஒரு கிரிக்கெட் வீரரின் பின்னால் இருக்கும் குடும்பத்தினரின் வலியையும் எதிர்பார்ப்பையும் அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது.
