நெல்லை மாவட்டம் பணகுடி அருகே டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டு வாலிபர் வெட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 10-ஆம் வகுப்பு மாணவன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன் (15), அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தான். இவனது வீட்டின் எதிரே வசிப்பவர் ரத்தின வடிவேல். இவரது மகன் சபரிராஜன் (23). இரு குடும்பத்தினரும் உறவினர்கள் போலவே இணக்கமாகப் பழகி வந்துள்ளனர். இதன் காரணமாக, லெட்சுமணன் அடிக்கடி சபரிராஜன் வீட்டுக்குச் சென்று விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
கடந்த 5-ஆம் தேதி பள்ளி முடிந்து திரும்பிய லெட்சுமணனை, சபரிராஜன் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் வரவேற்பு அறையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த சபரிராஜன், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லெட்சுமணனைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஊசலாடிய மாணவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சபரிராஜன், உடனே தனது மோட்டார் சைக்கிளிலேயே அவனைப் பணகுடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டான். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த லெட்சுமணன், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்த பணகுடி போலீசார், சபரிராஜனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மாணவன் உயிரிழந்துவிட்டதால், இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
