நெல்லை சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் பாஸ்கர் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தச்சநல்லூர் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்த அவரை 4 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சுற்றி வளைத்தது.
அக் கும்பல் பாஸ்கரைக் கொடூரமாக வெட்டி, அவரது தலையைத் துண்டித்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் வீசி எறிந்துவிட்டுத் தப்பியோடியது. இச்சம்பவம் தொடர்பாகக் கட்டுடையார்குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவரும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தனர். தப்பியோடிய மேலும் இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் பெண் தகராறு தொடர்பாக நிலவிய முன்பகையே இக்கொலைக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் அசம்பாவிதங்களைத் தடுக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல, நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த சின்னம்மாள் என்ற 77 வயது மூதாட்டியை மர்ம நபர் அடித்துக்கொன்று, அவரிடமிருந்த 40 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஹெல்மெட் அணிந்து வந்த அந்த நநபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவமாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் 16 மற்றும் 9 வயதுடைய இரு சிறுவர்களின் அழுகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அச்சிறுவர்கள் கொலை செய்யப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
