குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் மாவ்டி பகுதியில் நடந்த வேதனையான சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேஜஸ்பாய் சாவ்தா என்பவரின் ஒன்றரை வயது மகள் பார்த்தவி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிளாஸ்டிக் பந்தை விழுங்கியதால் உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களை மட்டுமன்றி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வீட்டில் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்த பார்த்தவி, தன்னிடம் இருந்த பிளாஸ்டிக் பந்தை தவறுதலாக விழுங்கினார். உடனடியாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவர் நிலை மோசமடைந்தது. பெற்றோர் பதற்றத்துடன் அருகிலுள்ள ஜனானா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை அளிக்கும் முன்பே, சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.

சிறுமியின் மரணம் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவர்கள் மிகவும் வேதனையில் கதறி துடிக்கிறார்கள்.

மருத்துவமனை ஊழியர்கள், சம்பவம் குறித்து உடனடியாக ராஜ்கோட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். குழந்தையின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதற்கான கடுமையான நினைவூட்டலாக அமைந்துள்ளது.

மேலும் பொதுமக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள், சிறிய குழந்தைகள் விளையாடும் பொழுது அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மிகுந்த பாதுகாப்புடன் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், எப்போது வேண்டுமானாலும் இதுபோன்ற அவசர நிலை ஏற்படலாம் என்பதால் முதற்கட்ட முதலுதவியை பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.