பெங்களூரு நகரின் வில்சன் கார்டன் பகுதியில் மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில், சஞ்ஜீவினி ஆம்புலன்ஸ் மிகுந்த வேகத்துடன் வந்ததால், தள்ளுவண்டிகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரி உள்ளிட்ட ஏழு பேர் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ரமேஷ் (வயது 49) என்ற தேங்காய் விற்பனையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 


சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்கள் மிகவும் கோபமடைந்து, ஆம்புலன்ஸ் டிரைவரான சிரஞ்சீவை பிடித்து தாக்கினர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது, “ஆம்புலன்ஸின் பிரேக் வேலை செய்யவில்லை” என சிரஞ்சீவ் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இந்த விபத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

விபத்து தொடர்பாக வில்சன் கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்புலன்ஸ் பராமரிப்பு, ஓட்டுநரின் அலட்சியம், மற்றும் வாகன பராமரிப்பு குறைபாடுகள் உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.