தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில், பட்டியலின மாணவிகள் விடுதி வார்டன் ஒருவர், கல்லூரி மாணவியை தடியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியானதையடுத்து, சம்பந்தப்பட்ட வார்டனை மாவட்ட ஆட்சியர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பூபாலப்பள்ளி பகுதியில் உள்ள அரசு பட்டியலின நலப் பெண்கள் விடுதியில், மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவி ஒருவருக்கும், விடுதி வார்டன் பவானி என்பவருக்கும் இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வார்டன் பவானி, அங்கிருந்த தடியை எடுத்து மாணவியை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.
அங்கிருந்த சக மாணவிகள் வார்டனைத் தடுக்க முயன்றும், அவர் எதனையும் பொருட்படுத்தாமல் மாணவியை இரக்கமின்றித் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது கைபேசியில் படம்பிடித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
View this post on Instagram
இந்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ரகுல் ஷர்மா உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். மாணவியைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய வார்டன் பவானியைப் பணி இடைநீக்கம் (Suspension) செய்து அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான சூழலில் கல்வி கற்க வேண்டிய விடுதியிலேயே மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
