சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த ஆறாம் தேதி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் சிறிது சிறிதாக காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைக்கும் போது அதனை பரிசோதித்து பின்னர் அதற்குரிய கவரில் தங்க நகைகளை வைத்து சீல் செய்து லாக்கரில் வைப்பது வழக்கம் என தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் வங்கி துப்புரவு பணியாளரான லூர்து மேரி(39) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த வங்கியில் வேலை பார்த்து வருகிறார். ஊழியர்கள் யார் என்ன வேலை செய்தாலும், உதவி கேட்டாலும் அதனை தட்டிக் கழிக்காமல் லூர்து மேரி உடனடியாக செய்தார்.

இதனால் அவர் மீது வங்கி மேலாளரும், ஊழியர்களும் நம்பிக்கை வைத்திருந்தனர். அதனை பயன்படுத்தி மேரி வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் தங்க நகைகளை சரி பார்த்து கவரில் போடும் பணியை செய்து வந்தார். அப்படி போடும்போது பல நகைகள் இருந்தால் ஒரு நகையை மட்டும் திருடி வைத்துக் கொண்டது தெரியவந்தது. இவ்வாறாக சுமார் நான்கு மாதங்களில் லூர்து மேரி 54 பவுன் தங்க நகைகளை திருடியது விசாரணையில் தெரியவந்தது. அந்த நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் லூர்து மேரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.