கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கொங்கு நகரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி நந்தகுமாரிடம் நீங்கள் கோவை வந்தால் நாம் ஒப்பந்தம் செய்து வியாபாரம் செய்யலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி நந்தகுமார் கோவைக்கு வந்தார். பின்னர் புருஷோத்தமன், கீதாஞ்சலி உள்பட 7 பேர் ஏலக்காய், குறுமிளகு ஆகியவற்றை கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து தருவதாக கூறியுள்ளனர்.

இதனை நம்பி நந்தகுமார் 14 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள ஏலக்காய், குறுமிளகு ஆகியவற்றை அனுப்பி வைத்தார். ஆனால் கூறியபடி அவர்கள் அதற்கான பணத்தை அனுப்பி வைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் அவர்கள் நந்தகுமாரை ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து நந்தகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் புருஷோத்தமன் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.