உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் ஆஷியானா பகுதியில் மதுபான வியாபாரி மானவேந்திர சிங் கொல்லப்பட்ட விவகாரம், உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. தனது தாயின் மரணத்திற்குத் தந்தையே காரணம் என சிறுவயது முதல் மனதில் வளர்த்த வெறுப்பு, 19 வயதில் ஒரு கொடூரக் கொலையில் முடிந்துள்ளது.
மானவேந்திர சிங்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மானவேந்திர சிங்கிற்குப் பிற பெண்களுடன் தொடர்பு இருந்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி உயிரிழந்தபோது, அதற்கு மானவேந்திர சிங் தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
அப்போது 11 வயது சிறுவனாக இருந்த மகன் அக்ஷத், தனது தாய்வழி உறவினர்களுடன் தங்கியிருந்தபோது, ‘தந்தையே தாயைக் கொன்றவர்’ என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாகப் பதியவைக்கப்பட்டது. வளர்ந்த பிறகும் தந்தையை ஒரு பொறுப்பான பாதுகாவலராகப் பார்க்காமல், தனது குடும்பத்தை அழித்த எதிரியாகவே அக்ஷத் கருதி வந்துள்ளான்.
சமீபகாலமாக மானவேந்திர சிங் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயற்சி எடுத்துள்ளார். இது அக்ஷத்திற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பிப்ரவரி 19-ஆம் தேதி இரவு, இது தொடர்பாகத் தந்தை – மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அன்று இரவு போதையில் இருந்த மானவேந்திர சிங், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் அறைக்குச் சென்று உறங்கியுள்ளார்.
இரவு முழுவதும் தூங்காமல் ஆத்திரத்தில் தவித்த அக்ஷத், அதிகாலை 4 மணி அளவில் தந்தையின் அறைக்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த துப்பாக்கியை எடுத்துத் தந்தையைச் சுட்டுக்கொலை செய்தான். அத்துடன் நிற்காமல், தந்தையின் உடலைப் பல துண்டுகளாக வெட்டியுள்ளான். போலீஸ் விசாரணையின்போது, அக்ஷத்தின் முகத்தில் எந்தவித குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ இல்லை என்பது அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சம்பவம் வெறும் குற்றச் செய்தி மட்டுமல்ல, சிதைந்து வரும் குடும்ப உறவுகளின் சாட்சி என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனக்காயங்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கப்படாததே இத்தகைய விபரீதங்களுக்குக் காரணம் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். தாயின் மரணம் மற்றும் தந்தையின் இரண்டாவது திருமணத் திட்டம் ஆகியவையே இந்தக் கொலைக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது அக்ஷத்தை கைது செய்துள்ள போலீசார், திட்டமிட்ட கொலை, உடலை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
