கொழும்புவில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பையின் இந்தியா – பாகிஸ்தான் மோதலில், பாகிஸ்தானின் புதிய ஸ்பின்னர் உஸ்மான் தாரிக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பந்தை வீசுவதற்கு முன்னால் திடீரென ஒரு வினாடி “ஸ்டேச்சு” போல அப்படியே உறைந்து நின்று, பிறகு பந்தை வீசுவதுதான் இவரது ஸ்டைல். இதைத் தனது ட்விட்டர் (X) பக்கத்தில் கிண்டல் செய்துள்ள இந்திய வீரர் யுஸ்வேந்திர சஹால், அந்தப் பந்தை எதிர்கொள்ள “சிறந்த வழி இதுதான்” எனக் கூறி, தான் மைதானத்தில் ஜாலியாகப் படுத்துக் கொண்டிருக்கும் அந்தப் புகழ்பெற்ற மீம் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். “அவர் நின்றால் நான் படுத்துக் கொள்வேன்” என்கிற ரேஞ்சில் சஹால் செய்த இந்த நக்கல் கிரிக்கெட் ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளது.

​முன்னதாக, உஸ்மான் தாரிக் பந்தை எறிகிறார் (Chucking) என ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், தனது கையில் இருக்கும் இரட்டை முழங்கை அமைப்பு (Twin Elbow) காரணமாகவே தனது ஆக்ஷன் அப்படித் தெரிவதாக உஸ்மான் விளக்கம் அளித்துள்ளார். இன்றைய போட்டியில் 11-வது ஓவரை வீச வந்த உஸ்மானை, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வரவேற்றார். இருந்தாலும், அந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்திய அணிக்குச் சவாலாகத் திகழ்ந்தார் இந்த மிஸ்டரி ஸ்பின்னர். சஹாலின் இந்த கமெண்ட் இந்திய – பாக். மோதலுக்கு நடுவே ஒரு ஜாலியான சூழலை உருவாக்கியுள்ளது.