டெல்லி உயர் நீதிமன்றம், விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் (பராமரிப்பு தொகை) வழங்குவது தொடர்பாக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும், இந்திய ரயில்வேயில் குரூப்-ஏ அதிகாரியாக பணியாற்றும் பெண்ணும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு 14 மாதங்களுக்குப் பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் உறவு முறிந்தது.
கணவர், “மனைவி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துகிறாள்; அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்துகிறாள்” என்று கூறி குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
விசாரணை நடந்தபோது, குடும்ப நீதிமன்றம் கணவரின் வாதங்களை ஏற்று விவாகரத்து வழங்கியது. ஆனால் மனைவி கோரிய நிரந்தர ஜீவனாம்ச (பராமரிப்பு) தொகை கோரிக்கையை நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கு, நீதிபதி அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது, விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள மனைவி ரூ.50 லட்சம் கோரியிருந்தது தெரியவந்தது. இதை கருத்தில் கொண்டு நீதிபதிகள், “உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுபவர்களே பராமரிப்பு தொகையை கோர முடியும். இந்த வழக்கில், மேல்முறையீட்டாளர் நிதி ரீதியாக நிலையானவர். இருவரும் மிகக் குறுகிய காலம் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளனர். குழந்தைகள் இல்லை. எனவே குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட தேவையில்லை” என்று தீர்ப்பளித்து மனைவியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.
மேலும் இந்த தீர்ப்பு, பணியாற்றும் மற்றும் நிதி ரீதியாக சுயமாக நிற்கும் பெண்கள் ஜீவனாம்சம் கோருவதற்கான வரம்புகளை விளக்குகிறது என சட்ட வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
