
துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியலும் மர்ம ஓலங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளும் மட்டுமே காண முடிகின்றது. மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இந்த பணியில் இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இரு நாடுகளிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட ஆர்மீனியா நாட்டின் எல்லை பகுதி துருக்கிக்கு நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்வதற்காக திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆர்மீனியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய துருக்கியின் சிறப்பு பிரதிநிதி செர்டார் கிலிக் தனது டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது “100 டன் எடையுள்ள உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்டவைகளை ஏற்றி வந்த ஐந்து வாகனங்கள் ஆர்மீனிய நாட்டு எல்லையை கடந்து வந்துள்ளது. இதற்காக ஆர்மீனி அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அதேபோல் ஆர்மீனிய நாட்டின் துணை அதிபர் ரூபன் ரூபின்யான் கூறியதாவது “மனிதநேய உதவிக்கான பொருட்களுடன் 5 வாகனங்கள் இன்று ஆர்மீனிய துருக்கி எல்லை பகுதியை கடந்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவியை செய்ய முடிந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.