துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது.

இதுவரையில் இரு நாடுகளிலும் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 34000 கடந்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் கட்டுமானங்கள் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கலாம். ஆனால் இதற்கு முழுமையான காரணம் அதன் வடிவமைப்பாளர்களே என்று கூறப்படுகின்றது.

மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படவும் உள்ளது. அதே நேரத்தில் கட்டிட வடிவமைப்பாளர்கள் துருக்கியில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு தப்பிச் செல்பவர்களை விமான நிலையங்களில் வைத்து போலீசார் கைது செய்து வருகின்றனர். இது தொடர்பாக தற்போது வரை 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கைது நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.