அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் தனது தோழியின் வீட்டிற்கு செல்லும் போது அங்குள்ள நாயுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த மாதம் அவர் நாயுடன் விளையாடிய போது அதன் மேல் இருந்த உண்ணி மைக்கேல் மீது ஏறி உள்ளது. இதை அவர் கவனிக்காததால் அந்த உண்ணி அவரை பல இடங்களில் கடித்துள்ளது. மைக்கேலும்  சாதாரண பூச்சி ஏதோ கடிப்பதாக நினைத்து நன்றாக சொரிந்துள்ளார்.

இதனால் அவர் சொறிந்த  இடங்களில் ஒரு விதமான திரவம் வெளிவந்துள்ளது. அதையும் மைக்கேல் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரால் கை கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவரது உடலில் பல இடங்களில் உண்ணி கடித்திருப்பதை கண்டறிந்தனர்.

இதுதான் அவரது இந்த நிலைக்கு காரணம் என்பதை புரிந்து கொண்டார்கள். மேலும் மைக்கேலின் கை கால்களில் இரத்த நாளங்கள் அடைக்கப்பட்டு ரத்த ஓட்டம் இல்லாமல் ஊதா நிறத்தில் மாறின. இதனால் அவரது இரண்டு கைகளையும் கால் பாதங்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனிடையே அவருக்கு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

அவரை காப்பாற்றுவது கடினம் என்று கூறிய மருத்துவர்கள், உலகம் முழுவதிலும் 2500 வகையான உண்ணிகள்  இருப்பதாகவும் அதில் பாக்டீரியாவால் தாக்கப்பட்ட உண்ணிகள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் உண்ணி கடித்த இடத்தை சொறிந்தால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் மற்ற இடங்களுக்கும் பரவிவிடும் என்று கூறுகின்றனர்.

மேலும் அந்த பாக்டீரியாக்கள் உடலின் தோலை உரித்து ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களின் அடைப்பை ஏற்படுத்தி உயிரையே எடுத்து விடும் என தெரிவித்துள்ளனர். எனவே பூச்சி கடித்து ஒரு வாரமாக ஆறவில்லை என்றால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.