ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரின் வாழ்வா-சாவா போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, சஞ்சு சாம்சன் தனது உருக்கமான உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்று வெற்றியில், சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இந்தியாவின் அரையிறுதி கனவை நனவாக்கினார்.

ஆட்டநாயகன் விருது வாங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாம்சன் கண் கலங்கினார். “இந்த வெற்றி எனக்கு உலகத்தையே வென்றது போன்ற உணர்வைத் தருகிறது. சிறுவயதிலிருந்தே நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் எனது கனவு. பல ஏமாற்றங்களையும், தோல்விகளையும் சந்தித்த எனது கிரிக்கெட் பயணத்தில், ‘என்னால் சாதிக்க முடியுமா?’ என்ற சந்தேகம் பலமுறை எழுந்துள்ளது. ஆனால், இறைவனின் அருளால் இன்று இந்தச் சிறப்பான தருணத்தைப் பார்க்கிறேன்,” என்றார்.

அணியில் வாய்ப்பு கிடைக்காத காலங்களைப் பற்றிக் குறிப்பிட்ட சாம்சன், “ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு. அணியில் வாய்ப்பு கிடைக்காதபோது, டக்-அவுட்டில் அமர்ந்து போட்டிகளை கவனித்தேன். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இக்கட்டான சூழலில் எப்படி விளையாடுகிறார்கள், ஆட்டத்தின் போக்கை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை உற்று நோக்கினேன். நான் 50 போட்டிகளில் விளையாடியிருந்தாலும், 100 போட்டிகளுக்கு மேல் அருகில் இருந்து கவனித்த அனுபவம் எனக்கு உதவியது,” என்று தெரிவித்தார்.

இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயித்த 196 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததால் நிதானமாக விளையாடியதாக சாம்சன் கூறினார். “கடந்த போட்டியில் முதலில் பேட் செய்ததால் அதிரடியாக விளையாடினேன். ஆனால், இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்ததால், பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியமாக இருந்தது. ஒவ்வொரு பந்தையும் கவனமாக எதிர்கொண்டேன். இன்று அனைத்தும் சிறப்பாக அமைந்தது,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.