கோவை ஈச்சனாரியை அடுத்த பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடிவந்துள்ளார். அப்போது அவரது ஆதார் அட்டையும், அவரது சகோதரரான வினுவின் போலீஸ் அடையாள அட்டையையும் கொடுத்து இருக்கிறார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, தினேஷ் வினுவை சந்தித்துள்ளார். அப்போது தினேஷ், வினுவிடம்  நீங்கள் எந்த ஸ்டேஷனில் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு வினு தான் அமைச்சருக்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாக கூறினார்.

அப்போது தினேஷின் உறவினர் அம்சவேணியும் கூட இருந்தார். இந்நிலையில் வினு தான் அமைச்சருக்கு எஸ்கார்ட் வேலையில் இருப்பதால், அரசு வேலை வாங்குவது எளிது என்றும் அதற்கு 2 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்றும் கூறினார். அதற்கு தினேஷும், அம்சவேணியும் வீட்டில் கேட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு சென்றனர். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி தினேஷ், வீரபத்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வெளியே சில பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் 2 நாட்களாகவே வீட்டிற்கு யாரும் வரவில்லை என்று கூறினர்.

இதனால் தினேஷ் மாற்று சாவி வைத்து வீட்டை திறந்து பார்த்த போது வீட்டில் கை துப்பாக்கி, தடிகள் மெட்டல் டிடெக்டர், தமிழ்நாடு போலீஸ் என்ற அடையாள அட்டை போன்றவை இருந்தனர். இதனை எடுத்து தினேஷ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, வினுவின் மீது ஏற்கனவே இதுபோன்று அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கு இருப்பதாக கூறினர். பின்பு காவல்துறையினர் வினு மற்றும் வீரபத்திரனை தேடி வந்த நிலையில், வினுவை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் வீரபத்திரனை வலை வீசி தேடி வருகின்றனர்.