நான் என்றென்றும் நிரந்தரமாக விளையாடப் போவதில்லை என்றும், ஆடும்போது விளையாட்டை ரசிப்பதாகவும் சதமடித்த கிங் விராட் கோலி தெரிவித்துள்ளார்..

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது. இந்திய அணி அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணி தோல்வி அடைந்தாலும் கூட அந்த அணியின் கேப்டன் சானகா 88 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இந்திய வீரர் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டித்தூக்கினார்..

இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு 45 ஆவது சதமாகும். ஒட்டுமொத்தமாக கோலிக்கு இது 73ஆவது சதமாகும். அதேசமயம் உள்நாட்டில் (சொந்த மண்ணில்) சச்சினுக்கு அடுத்தபடியாக 20 சதங்களை அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதனால் சச்சின் சாதனையை சமன் (20 சதம்) செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக இந்திய மண்ணில் விராட் கோலிக்கு இது 9ஆவது சதமாகும்.சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 49 சதம் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 45 சதம் அடித்துள்ளார் இன்னும் 4 சதம் அடித்தால் சச்சின் சாதனையை சமன் செய்வார். ஒட்டுமொத்தமாக 3 வகை கிரிக்கெட்டிலும் சச்சின் 100 சதமும், விராட் கோலி 73 சதமும், ரிக்கி பாண்டிங் 71 சதமும் அடித்துள்ளனர். இதனால் விராட் கோலியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வெற்றிக்கு பின் விராட் கோலி பேசியதாவது, “வித்தியாசமாக எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் போட்டிக்கு தயாராக இருப்பதும், நோக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். நான் பந்தை நன்றாக அடிப்பதாக நினைத்தேன்.இது நான் விளையாடும் டெம்ப்ளேட்டிற்கு அருகில் இருந்தது, எங்களுக்கு கூடுதலாக 25-30 ரன்கள் தேவை என்பதை புரிந்துகொண்டேன். இரண்டாவது பாதியில் நிலைமையை புரிந்து கொள்ள முயற்சித்தேன். போர்டில் எங்களுக்கு வசதியான ஸ்கோரை பெற முயற்சித்தேன். நான் கற்றுக்கொண்ட ஒன்று விரக்தி உங்களை எங்கும் கொண்டு செல்லாது. நீங்கள் விஷயங்களை சிக்கலாக்க தேவையில்லை, குழப்பிக்கொள்ள வேண்டாம். நீங்கள் அங்கு (மைதானம்) சென்று எந்த பயமும் இல்லாமல் விளையாடுங்கள் என்றார்.

மேலும் என்னால் எல்லா விஷயங்களையும்  கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சரியான காரணங்களுக்காக விளையாட வேண்டும் மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு விளையாட்டையும் உங்கள் கடைசி  விளையாட்டாக நினைத்து ஆட வேண்டும், அதைப் பற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆட்டம் தொடந்து முன்னோக்கி சென்றுகொண்டு தான் இருக்கும். நான் என்றென்றும் நிரந்தரமாக விளையாடப் போவதில்லை, நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன், விளையாடும் நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன், விளையாடுவதை ரசிக்கிறேன்,” என்று  கூறினார்.

இன்னிங்ஸ் இடைவேளையில் கோலி பேசியதாவது, ஆட்டத்தின் வேகத்தில் என்னால் விளையாட முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் நோக்கம் நிறைவேறியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நாங்கள் 340 ரன்களுக்குப் பதிலாக 370-க்கும் அதிகமான ரன்களுடன் முடித்தோம். அதிர்ஷ்டம் முக்கியம், அது ஒரு பங்கை வகிக்கிறது. அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக கோலியின் நல்ல ஃபார்ம் இந்தியாவுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், ஏனெனில் அவர் உலகக்கோப்பையில் போது மிடில் ஆர்டரில் முக்கிய பங்கு வகிப்பார் என நம்பலாம். அதே நேரத்தில் நான் நிரந்தரமாக விளையாடப் போவதில்லை என்று விராட் கோலி கூறியதால் அவர் ஓய்வை சூசகமாக தெரிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவுகிறது..