தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலைகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.5 ஆயிரம் கோடியில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. தற்போதைய தவெக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த ஜூன் 25-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற நிலையில், அண்மையில் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் விஜய், “ஒருவர் வெளிநாட்டில் போய் ஒளிந்து கொண்டார், சிங்கப்பூருக்கு செக்கப்புக்கு போனாரே அவர்” என்று எ.வ.வேலுவை நேரடியாகத் தாக்கி விமர்சித்திருந்தார்.
இந்த அரசியல் விமர்சனம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழ்நிலையில், சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய்யின் விமர்சனங்களுக்கு விமான நிலையத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். தான் கடந்த 2016 முதலே சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதயப் பிரச்சினைக்குச் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஜூன் 15-ஆம் தேதியே விசாவுக்கு விண்ணப்பித்து 17-ஆம் தேதியே டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டதாகவும் விளக்கமளித்தார்.
சோதனை நடந்த அன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, பயணத் தேதியை மாற்றிச் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வாமை, நரம்பு மற்றும் இதயம் தொடர்பான சிகிச்சைக்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், “நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை, பதுங்கவும் இல்லை; அது திமுகவினரின் பழக்கமும் இல்லை” என்று கூறிய எ.வ.வேலு, வரும் 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
