இன்றைய காலகட்டத்தில் மத ரீதியிலான கருத்து வேறுபாடுகள் ஆங்காங்கே தலைதூக்கினாலும், “மனிதநேயமே எல்லாவற்றையும் விட மேலானது” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த ஒரு இந்து சிறுமியை தத்தெடுத்து, வளர்த்து, தற்போது அவருக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்து சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர் ஒரு முஸ்லிம் தம்பதியினர்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தனது பெற்றோரை இழந்து தவித்த 10 வயது சிறுமியை அப்துல்லா மற்றும் கதீஜா தம்பதியினர் அரவணைத்தனர். அந்தச் சிறுமியின் மதம் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. தங்களுக்குக் கிடைத்த ஒரு மகளாகவே அவளைக் கருதி, கடந்த பத்து ஆண்டுகளாக அன்போடும் அரவணைப்போடும் வளர்த்து வந்தனர்.
அப்துல்லா தம்பதியினர் அந்தச் சிறுமியின் மீது தங்கள் மதத்தைத் திணிக்கவில்லை என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். அவளது மத நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் அவர்கள் முழுமையாக மதித்தனர். அநாதை என்ற உணர்வு அவளுக்குச் சிறிதும் ஏற்படாத வகையில், தங்கள் வீட்டு மகாலட்சுமியாகவே அவளைப் போற்றி வளர்த்தனர். சிறுமி திருமண வயதை எட்டியதும், அவளது விருப்பப்படியே ஒரு இந்து இளைஞரைத் தேடித் பிடித்துத் திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். திருமணத்தில் அந்தத் தம்பதியினர் செய்த நெகிழ்ச்சியான ஏற்பாடுகள் உருக்கவைக்கின்றன.
அதன்படி வேத மந்திரங்கள் முழங்க, அனைத்து இந்து முறைப்படியான சடங்குகளும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. ஒரு தந்தைக்குரிய ஸ்தானத்தில் இருந்து அப்துல்லா தன் மகளுக்குக் ‘கன்னிகாதானம்’ செய்து கொடுத்த தருணம், அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் நனைய வைத்தது. மகளுக்குச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும், சீர் வரிசைகளையும் மனமுவந்து செய்து, அவளது புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.
இந்தத் திருமணத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. “மனிதாபிமானம் மதத்தை விடப் பெரியது” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஜாதி, மத மோதல்கள் நிலவும் சூழலில், இச்சம்பவம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் அன்பிற்கு மொழியில்லை, கருணைக்கு மதமில்லை என்பதை அப்துல்லா – கதீஜா தம்பதியினர் நிரூபித்துள்ளனர். இவர்களது செயல் பல ஆயிரம் மக்களுக்குப் பாடமாகவும், உத்வேகமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
