கர்நாடகாவின் புகழ்பெற்ற தர்மஸ்தலா ஆன்மீகத் தலத்தைக் களங்கப்படுத்த முயன்ற வழக்கில், சதித் திட்டத்தில் ஈடுபட்ட ‘புருடே’ கும்பலைச் சேர்ந்த சின்னையா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு, ஒட்டுமொத்த வழக்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சின்னையா தனது மனுவில், “ஒரு நாள் இரவு 8 மணியளவில், புருடே கும்பலின் முக்கிய உறுப்பினரான கிரிஷ் மட்டன்னவர், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜை போனில் அழைத்து என்னிடம் பேசக் கொடுத்தார்.
அப்போது போனில் தமிழில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கிரிஷ் மட்டன்னவர் தன்னிடம் என்ன சொல்லச் சொன்னாரோ, அதை அப்படியே விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் வாக்குமூலமாகக் கூற வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்; அப்படிச் செய்தால், ஜூன் 29-ஆம் தேதி நேரில் வந்து உன்னைக் கட்டிப்பிடித்துக் கொள்வேன் என்றும் அவர் கூறினார்” என நடிகர் பிரகாஷ் ராஜின் நேரடித் தொடர்பை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும், தர்மஸ்தலாவின் புகழைக் கெடுப்பதற்காக மொத்தம் ரூ.200 கோடி பட்ஜெட்டுடன் ஒரு பிரம்மாண்ட சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறியுள்ள சின்னையா, இந்தத் திட்டத்திற்காகத் தனக்கு மகேஷ் ஷெட்டி என்பவர் ரூ.50 லட்சம் தருவதாக ஆசை காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சதி வேலைகளுக்காகக் கேரளா மாநிலத்திலிருந்தும், சித்திரதுர்காவைச் சேர்ந்த ராம நாகராஜ் என்பவராலும் பெருமளவில் பணம் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
இதற்காத் தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட கறுப்புப் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ரொக்கப் பரிமாற்றங்கள் குறித்த அனைத்து ஆதாரங்களையும் சின்னையா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். மகேஷ் திமரோடி, கிரிஷ் மட்டன்னவர், வித்தலகௌடா, ஜெயந்த் ஆகியோரே இந்தச் சதியின் முக்கிய சூத்திரதாரிகள் என்றும், இவர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட பின்பும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு அதிரடியாக ஒத்திவைத்துள்ளது.
மேலும் முன்னதாக கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் பல உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் மண்டை ஓடுகள் சிக்கியதாகவும் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவங்கள் அரங்கேறியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இது அந்த இடத்தின் புகழை கெடுப்பதற்கான சதி வேலை என்றும் இதில் பிரகாஷ்ராஜுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
