மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் நான்கு வெவ்வேறு கார்களில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் பயன்படுத்திய சொகுசு கார் உள்ளிட்ட 4 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஔசப் அலி கான் பிப்ரவரி தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளியான மாஜ் கான் பிப்ரவரி 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து மாணவியை மிரட்டி, பணம் பறித்ததோடு பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இது பற்றிய விசாரணையில் ஒரு  ‘தார்’ காரில் வைத்து ஔசப் அலி கான் அந்த மாணவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார். அப்போது வெளியிலிருந்து மாஜ் கான் என்பவர் தனது ஐபோன் மூலம் அந்தச் சம்பவத்தை ரகசியமாகப் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, மாணவியிடம் 40,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மேலும், அந்த வீடியோவை வைத்து மிரட்டி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, போபால் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், ஏசிபி அங்கிதா கத்ரகர் தலைமையில் சிறப்பு விசாரணைத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் செகோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். எனினும், வீடியோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட ஐபோனை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கோஹேபிசா காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் ஒருவருக்கும், குற்றவாளி மாஜ் கானுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமானது. வழக்கு தொடர்பான ரகசியத் தகவல்களை அவர் கசியவிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அந்தத் தலைமைக் காவலர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தனிப்படையினர் இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.