உத்தரபிரதேச மாநிலம் மதுராவின் கப்பர்பூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், இப்போது மாந்திரீக விவகாரமாகத் திசை மாறியுள்ளது. குடும்பத் தலைவர் மனிஷ், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் பாலில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டனர். தொடக்கத்தில் இது சாதாரணத் தற்கொலை என்று கருதப்பட்டாலும், மனிஷ் ஒரு மந்திரவாதியுடன் தொடர்பில் இருந்து தந்திர வித்தைகளைக் கற்று வந்ததாக உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம் போலீஸாரையே அதிரவைத்துள்ளது. குடும்பத்தில் பணக் கஷ்டம் எதுவும் இல்லாத நிலையில், ஒரு மாந்திரீக சடங்கிற்காக அல்லது ‘சித்தி’ பெறுவதற்காக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

​சம்பவ இடத்தில் இருந்த சுவரில் “நாங்கள் எங்கள் விருப்பப்படியே சாகிறோம்” என்று எழுதப்பட்டிருந்தாலும், போலீஸார் அந்த மந்திரவாதியைத் தூக்கி வந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மனிஷ் சாவதற்கு முன்னால் ஒரு வீடியோவையும் எடுத்துள்ளார், அதை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஏதோ ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்று நம்பி, அந்தப் பிஞ்சு குழந்தைகளுக்குப் பாலில் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மதுராவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மூடநம்பிக்கை ஒரு அழகான குடும்பத்தையே சுடுகாட்டுக்கு அனுப்பியிருப்பது பெரும் வேதனையளிக்கிறது.