திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டியிருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். தமிழக அரசு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது தமிழக காவல்துறை மீதான நம்பிக்கையை பாதுகாக்கவே என்று தினகரன் விளக்கினார். மேலும், எந்த ஆட்சியாக இருந்தாலும் இதுபோன்ற மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தி.மு.க கூட்டணிக்கு தான் ஆதரவாக இல்லை என்று தெளிவுபடுத்திய தினகரன், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி தனக்குத் தானே “புரட்சி தமிழர்” என்ற பட்டம் சூட்டிக் கொண்டதாகவும், ஊழல் குறித்து பேச அவருக்கு தகுதியில்லை என்றும் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் எனவும், டாஸ்மாக் மூலம் அரசு ஊழல் செய்ததாக எடப்பாடி குற்றம்சாட்டுவது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் வெறும் பேச்சாகவே உள்ளது என்றும் தினகரன் தெரிவித்தார்.