மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற மாரத்தான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீர்ச்சந்தியை முழுமையாக முடக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி கொள்கை மற்றும் ஹார்முஸ் விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பதால், இந்த நீர்ச்சந்தி வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களையும் தடுத்து நிறுத்த அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேசக் கப்பல்களிடம் ஈரான் ‘சட்டவிரோத சுங்கக் கட்டணம்’ வசூலிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், ஈரானுக்குக் கட்டணம் செலுத்தும் கப்பல்கள் எதையும் ஹார்முஸ் வழியாக அனுமதிக்க முடியாது என்றும், அந்தப் பகுதியில் ஈரான் அமைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டோங் ஜூன் கூறுகையில், மத்திய கிழக்கின் நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ஈரானுடன் எங்களுக்கு ஆழ்ந்த வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் மதிப்போம். எங்கள் கப்பல்கள் ஹார்முஸ் வழியாகத் தொடர்ந்து பயணிக்கும். இதில் வெளிச்சக்திகளின் தலையீட்டைச் சீனா ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரானுக்குச் சீனா ஆயுதங்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் புகார்களைச் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்படும் என்ற செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே உலக பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு இறக்குமதிக்கு இந்தப் பாதையையே இந்தியா அதிகம் சார்ந்துள்ளதால், எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் அமெரிக்கா – சீனா – ஈரான் ஆகிய நாடுகள் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளதால், உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.