ஜெப்டோ (Zepto) தளத்தில் ஆர்டர் செய்த ‘Eggoz’ பிராண்ட் முட்டைகளை வேகவைக்கும்போது, உள்ளே நூடுல்ஸ் வடிவில் பிளாஸ்டிக் போன்ற பொருள் வந்ததாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். “பெரிய பிராண்டுகளே இப்படிச் செய்தால் எதைத்தான் நம்பி வாங்குவது?” என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு பதிலளித்த Eggoz நிறுவனம், வாடிக்கையாளர் புகாரை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

​இருப்பினும், அந்த வீடியோவில் காட்டியது பிளாஸ்டிக் அல்ல என்றும், அது முட்டையின் இயற்கையான ஒரு பகுதியான ‘சலசா’ (Chalaza – கருவை நிலைநிறுத்தும் மெல்லிய சவ்வு போன்ற பகுதி) என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே இத்தகைய புகார்கள் எழுந்தபோது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் சோதனைகளை நடத்தி, இந்தியாவில் விற்பனையாகும் முட்டைகள் பாதுகாப்பானவை என உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.