மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு மிக அருகில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல் பெரும் ராஜதந்திர மோதலுக்கு வித்திட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கோ அல்லது கட்டிடத்திற்கோ நேரடிச் சேதம் ஏற்படவில்லை என்றாலும், குண்டுவெடிப்பின் அதிர்வுகள் தூதரக வளாகத்தையே உலுக்கியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் அரசு, இஸ்ரேலுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

“பாகிஸ்தான் ஒன்றும் கத்தார் கிடையாது; உலகில் எந்தப் பகுதியில் எங்கள் தூதரக அதிகாரிகளுக்குத் தீங்கு விளைவித்தாலும், அதற்குரிய விலையை இஸ்ரேல் கொடுக்க வேண்டி இருக்கும்” எனப் பாகிஸ்தான் வியூக மன்றம் பகிரங்கமாகச் சூளுரைத்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் வேளையிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை எனச் சொல்லிக்கொண்டே, மறுபுறம் ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கெர்மான்ஷா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்படப் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை ஈரானுக்குக் காலக்கெடுவை நீட்டித்துள்ளதோடு, ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.