திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த மொழி மீதும் வெறுப்பு கிடையாது. அதே நேரத்தில் மொழியை திணிக்க நினைத்தால் போராடாமல் இருக்க மாட்டோம். ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசின் சதியை உணர்ந்துதான் மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. பாஜக ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை வஞ்சிப்பதை மட்டும் தான் தங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர். பாஜக ஆட்சியாளர்கள் மட்டும்தான் மொழித் திணிப்பை ஆதரிக்கிறார்கள்.

ஹிந்தி திணிப்பை ஆதரித்து கவர்னர் பேசுவது புதிது கிடையாது இதை நினைத்து ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. ரூபாய் நோட்டுகளில் இருப்பது மொழி சமத்துவம். மத்திய அரசு செய்வது மொழி திணிப்பு. ஆளுநர் பேசியதை பொருட்படுத்த வேண்டாம். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளை படிக்கின்ற வாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு கிடைப்பதில்லை என்று ஆளுநர் புது சரடு விட்டுக் கொண்டிருக்கிறார்.

பாஜக ஆட்சி செய்யும் வட இந்திய மாநிலங்களில் எத்தனை வட இந்திய மொழிகளை பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். ரயில் நிலையங்களில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிக்கும்போதுரூபாய் நோட்டுகளில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களையும் அழிக்க வேண்டியது தானே என்று சில அதிமேதாவிகள் அதிக பிரசங்கித்தனமாக கேட்கிறார்கள். ரயில்வே மற்றும் மத்திய அரசின் துறைகளில் ஹிந்தி திணிப்பு நடக்கிறது. ரூபாய் நோட்டுகளில் ஹிந்தி மொழி மட்டுமா இருக்கிறது. நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போகணும். எந்த மொழி மீதும் எங்களுக்கு வெறுப்பு கிடையாது. மேலும் உத்திரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் எத்தனை வட இந்திய மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றார்.